பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்;நாகர்கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-02-14 18:08 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., வேனில் நின்றவாறு நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் சிறப்பாக வாக்களித்து தி.மு.க.வின் மதசார்பற்ற கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது போல உள்ளாட்சி தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பதற்காக காத்திருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வெற்றியைத் தேடித் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
விழிப்புணர்வை ஏற்படுத்தியது
கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தது. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக மக்கள் அமர வைத்தார்கள். அப்போது கொரோனா 2-வது அலையால் மிகவும் ஆபத்தான சூழ்நிலை இருந்தது. ஆஸ்பத்திரியில் இடம் இல்லை, இடம் கிடைத்தால் படுக்கை இல்லை, படுக்கை இருந்தால் ஆக்சிஜன் இல்லை, மருந்து இல்லை என்ற நிலையில் தான் தி.மு.க. ஆட்சி அமைத்தது. 
அதற்கு முன்பு கொரோனா முதல் அலையின் போது அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அவர்கள் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. தடுப்பூசியையும் அவர்கள் சரியாக போடவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா பாதிப்பு இருந்த ஒரு வருடத்தில் ஒரு கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டிருந்தார்கள்.
தி.மு.க. ஆட்சி அமைந்த இந்த 9 மாத காலத்தில் பத்து கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனால் தான் 3-வது அலையை எளிதாக கடந்து வந்து விட்டோம். அதற்கு தடுப்பூசி போட்டால் தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என்ற விழிப்புணர்வை தி.மு.க. அரசு ஏற்படுத்தியது. 
நம்பர் ஒன் முதல்-அமைச்சர்
இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்த ஒரே முதல்-அமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான். அவரது செயல்பாடுகள் மூலம் இந்தியாவில் நம்பர் ஒன் முதல்-அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி பேசினார். கடந்த மூன்று நாட்களாக பிரசாரத்தில் என்னை பற்றி பேசுகிறார். சட்டசபை தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் நிறைய பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு காணாமல் போய் விட்டார் என்று சொல்லி என்னை தேடிக்கொண்டு இருக்கிறார். நான் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து நமது சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி என்னை தேடிக்கொண்டிருக்கிறார். என் வீட்டில் கூட என்னை இப்படி தேடமாட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தேடி வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சட்டசபையில் நடந்த சிறப்புக்கூட்டத்தில் நீட் மசோதா தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றும்போது எனது எதிரே தான் அமர்ந்திருந்தார்.
 எடப்பாடி பழனிசாமி டேபிளுக்கு மேல் பார்த்தால் தான் தெரியும். டேபிளுக்கு கீழே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி தெரியும். அவர் நான் பொய் வாக்குறுதி கொடுத்து காணாமல் போய்விட்டதாக கூறுகிறார்.
கொரோனா நிவாரண நிதி
எதிர்க்கட்சி தலைவருக்கு நான் சொல்லிக் கொள்வது, தி.மு.க. ஆட்சி அமைக்கும் போது அரசு கஜானாவை அ.தி.மு.க. அரசு சுத்தமாக காலி செய்து விட்டு, ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு போயிருக்கிறார்கள். இருந்தாலும் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கினார்.
பெண்களுக்கு இலவச பஸ் வசதி, ஆவின், பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற வாக்குறுதிகளையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். தமிழக வரலாற்றில் மகளிர் சுய உதவிகுழுக்கள் வாங்கியுள்ள அனைத்து கடனும் ரத்து என்ற வாக்குறுதியையும் செயல்படுத்தியுள்ளார். அறவழியில் போராடியவர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் செய்யப்பட்டுள்ளது.
மாநில உரிமைகள் மீட்பு
மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை 1000 ரூபாய் விரைவில் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விரைவில் கண்டிப்பாக அதையும் செய்து முடிப்பார். 
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி 5 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மோடியை பார்த்து சவால் விட்டுள்ளார். தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை பா.ஜனதாவால் கால் வைக்க முடியாது. தமிழகத்தை பார்த்தாவது திருந்த வேண்டும் என்று மோடியை பார்த்து ராகுல்காந்தி சவால் விட்டுள்ளார். அந்த அளவுக்கு பாசிச பா.ஜனதாவுக்கும், அதனுடைய அடிமை அ.தி.மு.க.வுக்கும் சிம்ம சொப்பனமாக தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்கி கொண்டிருக்கிறார். மாநில உரிமைகள் பறிக்கப்படும் போதெல்லாம் அவர் தான் குரல் கொடுத்து மீட்டெடுத்துள்ளார்.
புறக்கணிப்பு
அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளாக இந்த மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாகர்கோவில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த 8 மாத காலங்களில் சாலைகளை சீரமைக்க 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, புதிதாக சாலைகளை தரம் உயர்த்துவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் 4 மாதத்தில் அனைத்து வீடுகளுக்கும் இல்லம் தோறும் குடிநீர் வழங்கப்படும்.
மாநகர பகுதியில் உள்ள உரக்கிடங்கை, மாநகருக்கு வெளியே வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொடுத்துள்ளீர்கள். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. வேலைகள் நடந்து வருகிறது. 2011-ல் தி.மு.க ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டு காலமாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அந்த வேலைகளை எல்லாம் வேகப்படுத்தி உள்ளோம். இன்னும் ஆறு மாதத்தில் கண்டிப்பாக இந்த வேலைகள் நிறைவேற்றி தரப்படும். தலைவர் அறிவித்த வேட்பாளர்களையும், கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் கேட்சன், அரசு வக்கீல் லீனஸ்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் தாமரை பாரதி, மதியழகன், பொதுக்குழு உறுப்பினர் சேக்தாவூது, நிர்வாகிகள் எம்.ஜே.ராஜன், இ.என்.சங்கர், வக்கீல் மாதவன் முருகன், பார்த்தீபன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாவட்ட மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், தி.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் மற்றும் நிர்வாகிகள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர தி.மு.க. செயலாளர் வக்கீல் மகேஷ் நன்றி கூறினார்.
பிரசாரத்தின் போது அங்கு அமைக்கப்பட்டு இருந்த பிரசார மேடையில் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.- கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரிசையாக நின்றிருந்தனர்.

மேலும் செய்திகள்