கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் சாவு
திருவாரூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்தார். சாவிலும் இணை பிரியா இந்த தம்பதி குறித்த விவரம் வருமாறு:-
திருவாரூர்:
திருவாரூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்தார்.
சாவிலும் இணை பிரியா இந்த தம்பதி குறித்த விவரம் வருமாறு:-
உடல் நிலை பாதிப்பு
திருவாரூர் அருகே உள்ள பள்ளிவாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி(வயது 76). இவருடைய மனைவி சந்திரா(68). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக பக்கிரிசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்தார்.
கணவர் சாவு
நேற்று முன்தினம் பக்கிரிசாமி உயிரிழந்தார். கணவரின் இறப்பை சந்திராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் தன்னுடன் இருந்தவர் இன்று உயிருடன் இல்லையே என்று அவரது உடலின் அருகில் அமர்ந்து கணவரின் முகத்தை பார்த்தபடி சந்திரா அழுதுகொண்டே இருந்தார்.
பக்கிரிசாமியின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், அவர் வந்த உடன் இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்கள் காத்திருந்தனர்.
மனைவியும் உயிரிழந்தார்
கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்த சந்திரா இரவு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
வெளிநாட்டில் இருந்து மகன் வருவதற்குள் தந்தை-தாய் என இருவரும் இறந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
52 ஆண்டுகளாக இணை பிரியாமல் வாழ்ந்த இந்த தம்பதியினர் சாவிலும் இணை பிரியாதது குறித்து உறவினர்கள் கூறுகையில், இருவரும் மிகவும் அன்புடனும், பாசத்துடனும், அன்னியோனியமாகவும் வாழ்ந்து வந்தனர்.
இணை பிரியாத தம்பதி
பக்கிரிசாமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து சந்திரா மிகவும் கவலையுடன் இருந்து வந்தார்.. அடிக்கடி கணவருடன் சேர்ந்து நானும் இறந்து விட்டால், அது எனது பாக்கியம் ஆக இருக்கும் என்று கூறி வந்தார். அது இப்போது அது உண்மையாக நடந்து விட்டது என்று தெரிவித்தனர்.
பக்கிரிசாமியின் மகன் வெளிநாட்டில் இருந்து வந்ததும் பக்கிரிசாமி-சந்திராவுக்கு இறுதி சடங்குகள் செய்தார். பின்னர் கணவன்-மனைவி இருவரின் உடலையும் ஒரே பாடையில் வைத்து எடுத்து சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.