கள்ளக்குறிச்சியில் வாக்கு சேகரிப்பின்போது தி மு க அ தி மு க வேட்பாளர்கள் இடையே திடீர் வாக்குவாதம்
கள்ளக்குறிச்சியில் வாக்கு சேகரிப்பின்போது தி மு க அ தி மு க வேட்பாளர்கள் இடையே திடீர் வாக்குவாதம் போலீசார் விசாரணை;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 18 வார்டுகளிலும், அ.தி.மு.க 21 வார்டுகளிலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு வார்டுகளிலும், பா.ஜ.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் 11-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் நகர செயலாளர் பாபு, தி.மு.க சார்பில் போட்டியிடும் சர்புதீன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று செக்கு மேட்டுத்தெருவில் அ.தி.மு.க வேட்பாளர் பாபு மற்றும் கட்சியினர் வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த தி.மு.க வேட்பாளர் சர்புதீன் மற்றும் பாத்திரக் கடை உரிமையாளர் செந்தில் இருவரும் இந்த பகுதியில் ஓட்டு கேட்க கூடாது என கூறி பாபுவை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல் அ.தி.மு.க வேட்பாளர் பாபு மற்றும் கவுதம், சந்துரு, ஜெயந்தி ஆகியோர் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை கொடுக்க முயன்றதாகவும் அதை தடுத்த போது ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தி.மு.க வேட்பாளர் சர்புதீனும் போலீசில் புகார் கொடுத்தார். இரு வேட்பாளர்கள் கொடுத்த புகார் மனு குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்குசேகரிப்பின்போது அ.தி.மு.க மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.