அரளிப்பாறையில் நாளை மஞ்சுவிரட்டு
சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் புகழ் பெற்ற மஞ்சுவிரட்டு நாளை(புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் புகழ் பெற்ற மஞ்சுவிரட்டு நாளை(புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரளிப்பாறை மஞ்சுவிரட்டு
தமிழர்களின் வீர விளையாட்டாக திகழ்ந்து வருவது ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள். தென் மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதிலும் சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடக்கும் மஞ்சுவிரட்டு என்பது மிகவும் புகழ் பெற்றதாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல், அரளிப்பாறை, கண்டுப்பட்டி, என்.புதூர், எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு மஞ்சுவிரட்டுகள் புகழ்பெற்றதாகும். அதிலும் குறிப்பாக சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடைபெறும் மஞ்சுவிரட்டு மிகவும் புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடைபெறும் இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் அரளிப்பாறையில் அமர்ந்து பார்த்து ரசிப்பது தனி சிறப்பாகும்.
முன்னேற்பாடு பணிகள்
இந்த ஆண்டிற்காக இந்த மஞ்சுவிரட்டு நாளை(புதன்கிழமை) மாசி மகத்தன்று நடக்கிறது. இதற்காக தற்போது அங்கு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. மஞ்சுவிரட்டு திடல், மற்றும் வாடிவாசல் பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும், பணி, முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. வருவாய்த்துறையினர் சார்பில் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் கயல்செல்வி, மருதிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.