பரமத்திவேலூர் அருகே மரவள்ளி தோட்டத்தில் வாலிபர் மர்மசாவு போலீசார் விசாரணை

பரமத்திவேலூர் அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-14 17:05 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் உடல்
பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் தொழிலாளர்கள் மரவள்ளி அறுவடை செய்து வந்தனர். அப்போது மரவள்ளி தோட்டத்திற்கு இடையே வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக தொழிலாளர்கள் இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் பரமத்திவேலூர் பொன்னி நகரை சேர்ந்த முருகேசன் மகன் பாரதிராஜா (வயது 27) என தெரியவந்தது. 
விசாரணை
கேட்டரிங் முடித்த அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்ததும், அவர் நேற்று முன்தினம் காலை திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றவர் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் பிணமாக கிடந்ததும் தெரியவந்துள்ளது. 
இதுகுறித்து பரமத்தி போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்