கடலூர் ரெயில்வே கேட்டில் சிக்னல் கோளாறு எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது

கடலூர் கம்மியம்பேட்டை ரெயில்வே கேட்டில் சிக்னல் கோளாறால், ராமேஸ்வரம்- அயோத்தியா எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.;

Update: 2022-02-14 16:33 GMT

கடலூர், 

புனித யாத்திரை மேற்கொள்ள வசதியாக ராமேஸ்வரம் - அயோத்தியா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வரு கிறது. இந்த ரெயில் நேற்று காலை 9.25 மணி அளவில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் வழியாக வந்து கொண்டிருந்தது. 

அப்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை தாண்டி உள்ள கம்மியம்பேட்டை ரெயில்வே கேட்டில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் அந்த ரெயில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் கம்மியம்பேட்டை ரெயில்வே கேட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது சிக்னல் கோளாறாகி இருந்ததால் சிக்னல் கிடைக்கவில்லை என்று தெரிந்தது.

 இதையடுத்து பழுதான சிக்னலை சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்த ரெயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. அதன்பிறகும் செல்ல வேண்டுமெனில் சிக்னல் கிடைக்க வேண்டும். ஆனால் சிக்னல் பழுதால், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலை இயக்க முடிய வில்லை.

1 மணி நேரம் தாமதம்

பின்னர் நீண்ட நேரம் கழித்து அந்த சிக்னல் சரி செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. இருப்பினும் இந்த ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் ரெயிலில் வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

முன்னதாக சிக்னல் பழுதால் கம்மியம்பேட்டை ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் காலை 10 மணிக்கு கூலி வேலைக்கு செல்வோர், அலுவலகத்திற்கு செல்வோர் என அனைவரும் நீண்ட நேரம் வாகனத்தில் காத்திருந்தனர். 

இதை பார்த்தரெயில்வே ஊழியர்கள், சிக்னலை சரி செய்வதற்குள், அதை தற்காலிகமாக சிறிது நேரம் திறந்து விட்டனர். கூட்டம் குறைந்ததும் மீண்டும் கேட்டை மூடி சரி செய்த பிறகு திறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் கம்மியம்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்