அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை
அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி ஏலச்சந்தை உள்ளது. தினமும் நடைபெறும் இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தக்காளிகள் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் நாளொன்றுக்கு 100 டன்னுக்கும் அதிகமாக தக்காளிகள் விற்பனை நடைபெறும். இதனால் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் அதிக அளவில் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். உள்ளுர் தக்காளி வரத்து குறைவாக இருக்கும்போது ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில தக்காளிகளும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே மாவட்டத்தில் தக்காளியின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையாக அய்யலூர் திகழ்ந்து வருகிறது.
தற்போது அய்யலூர் சந்தையில் உள்ளூர் தக்காளிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலை தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு 15 கிலோ எடை கொண்ட ஒருபெட்டி தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை வீழ்ச்சியடைந்து நேற்று ஒரு பெட்டி ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.