வாக்காளரின் கைவிரலில் வைக்கப்படும் அழியாத மை உள்பட 30 வகையான பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளரின் கைவிரலில் வைக்கப்படும் அழியாத மை உள்பட 30 வகையான பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணி நேற்று நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளில் 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 747 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே 8 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 478 பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி 737 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டன. பின்னர் அவை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் தனிஅறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன. மேலும் அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
30 வகையான பொருட்கள்
இந்த நிலையில் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த வேண்டிய பொருட்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு இருந்தன. அவற்றை வாக்குச்சாவடி வாரியாக பிரித்து தயாராக வைக்கும் பணி நேற்று மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 183 வாக்குச்சாவடிகளுக்கும் பொருட்களை பிரிக்கும் பணி, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் வாக்காளரின் கைவிரலில் வைக்கப்படும் அழியாத மை, பென்சில், ரப்பர், பேனா, வாக்காளர் கையெழுத்திடும் புத்தகம், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் சீட்டு, வாக்குப்பதிவு எந்திரத்தை சீல் வைக்க பயன்படுத்தப்படும் அரக்கு, மெழுகுவர்த்தி, நூல், வாக்குப்பதிவு எந்திரத்தை மறைக்கும் அட்டைகள் உள்பட 30 வகையான பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி பெட்டிகளில் வைக்கப்பட்டன.
இவை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் சேர்த்து தேர்தலுக்கு முந்தைய நாள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்படும். இந்த பொருட்கள் பிரிக்கும் பணியை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான கமிஷனர் சிவசுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சேதுராஜன், முருகேசன், மாரியப்பன், வில்லியம் சகாயராஜ், செபஸ்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.