நடுவட்டம் முன்னேற்றம் பெறுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் நடுவட்டம் பகுதி முன்னேற்றம் பெறுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் நடுவட்டம் பகுதி முன்னேற்றம் பெறுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நடுவட்டம் பகுதி
கூடலூர் அருகே உள்ள நடுவட்டம் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில் 6 ஆயிரத்து 053 வாக்காளர்கள் உள்ளனர்.
இங்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நடுவட்டம் பகுதியில் ஊசிமலை காட்சி முனை, ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, மிகவும் புகழ்பெற்ற பைக்காரா படகு குழாம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
வேலைவாய்ப்பு இல்லை
இங்கு தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். போதிய வேலை வாய்ப்புகள் இல்லாத தால் அவர்கள் தினமும் கூடலூர் அல்லது ஊட்டிக்கு சென்று வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் இந்த பகுதியை முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நடுவட்டம் பகுதியில் பெரிய அளவில் சுற்றுலா திட்டங்கள் கிடையாது. இயற்கை காட்சிகள் மற்றும் புல்வெளி பிரதேசங்கள் கொண்ட இந்த பகுதியில் பூங்கா திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சினிமா படப்பிடிப்புகள் நடத்த கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் இந்த பகுதியை சேர்ந்த பொமக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் ஆங்கிலேயர் கால சிறைச்சாலை மற்றும் ஊசிமலை காட்சி முனையை மேம்படுத்தினால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.