ஊட்டியில் படகு ஓட்டுனர்கள் திடீர் போராட்டம்

மேலாளர் தரக்குறைவாக பேசியதாக கூறி ஊட்டியில் படகு ஓட்டுனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2022-02-14 14:34 GMT
ஊட்டி

மேலாளர் தரக்குறைவாக பேசியதாக கூறி ஊட்டியில் படகு ஓட்டுனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

ஊட்டி படகு இல்லம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம் செயல் பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று படகு இல்லத்தில் ஏராளமான சுற்றலா பயணிகள் திரண்டனர்.  அவர்கள் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுக்க சென்றனர். 

அப்போது அங்கு நின்ற துடுப்பு படகு ஓட்டுனர்கள் துடுப்பு படகில் செல்ல வருமாறு சுற்றுலா பயணிகளிடம் கூறினார்கள். அத்துடன் ஒரே இடத்தில் 6 பேர் குவிந்து நின்றதால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறும் ஏற்பட்டது. 

துடுப்பு ஓட்டுனர்கள் போராட்டம்

இதை பார்த்த படகு இல்ல மேலாளர் சாம்சன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஒரே இடத்தில் அதிகம்பேர் கூடக்கூடாது என்றும், 2 பேர் மட்டும் நிற்குமாறும் கூறியதுடன், அவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கினார். 

இந்த நிலையில் துடுப்பு படகு ஓட்டுனர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு, மேலாளர் தங்களை தரக்குறைவாக பேசியதாக கூறி திடீரென படகு இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்கள் துடுப்பு படகுகள் மற்றும் மோட்டார் படகுகளையும் இயக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இந்த போராட்டம் 2 மணி நேரமாக தொடர்ந்தது. இதனால் படகுகளில் சவாரி செய்ய டிக்கெட் எடுத்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இதையடுத்து அவர்கள் செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களிடம் மேலாளர் சாம்சன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது அவர்கள் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு படகுகளை இயக்கினார்கள். டிரைவர்கள் போராட்டம் காரணமாக 2 மணி நேரம் படகுகள் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

அறிவுரைகள்

இது குறித்து படகு ஓட்டுனர்கள் கூறும்போது, மேலாளர் தரக்குறைவாக பேசியதாக நிரந்தர ஊழியர் எங்களிடம் கூறினார். அதனால் போராட்டத் தில் ஈடுபட்டோம் என்றனர். 

மேலாளர் சாம்சன் கூறும்போது, சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக சிலர் நின்றதால் அறிவுரைகள் வழங்கப்பட்டன. வாய் தவறி பேசிய நிரந்தர ஊழியரிடம் கடிதம் எழுதி பெறப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்