பொள்ளாச்சியில் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சியில் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் ெபாதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து உள்ளார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் ெபாதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து உள்ளார்கள்.
தாறுமாறாக நிறுத்தம்
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 3,254 சதுர மீட்டரும், அரசு நிலம் 6,836 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.33 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதை தவிர சாலை பணிக்கு ரூ.34 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் மெட்ராஸ் ரோடு சந்திப்பில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கடை வீதிக்கு செல்லும் வாகனங்கள் விதிமுறையை மீறி ஒரு வழிப்பாதையில் செல்கிறது. மேலும் சாலை ஓரத்தில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கண்டுகொள்ளாத போலீசார்
பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. நியூஸ்கீம் ரோடு சந்திப்பு, தேர்நிலை திடல், கடை வீதி சந்திப்பு, ராஜாமில் ரோடு சந்திப்பு பகுதிகளில் ரவுண்டானா அமைத்து, நீருற்று, புல்வெளிகள் போன்றவை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ரவுண்டானா பணிகளை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளனர். தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையை அகலப்படுத்தி 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வாகன நிறுத்தும் இடமாக மாற்றி உள்ளனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டிய போலீசார் முக்கிய சாலைகளில் சந்திப்பில் இருந்து நின்று கவனிப்பை பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். நியூஸ்கீம் ரோடு, காந்தி சிலை பகுதி, அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலக ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால் கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட சாலையால் எந்த பயனும் இல்லை. இதேபோன்று கடை வீதிக்கு செல்லும் வாகனங்கள் விதிமுறையை மீறி ஒரு வழிப்பாதையில் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்தை கட்டுப்படுத்த, விபத்துகளை தடுக்க அதிகாரிகள், போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினால் மட்டும் போதாது. விதிமுறையை மீறி வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.