மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி
தூத்துக்குடியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவகம் முன்பு இருந்து பேரணியை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
உந்துசக்தி
அப்போது, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் ஒவ்வொரு முன்னெடுப்புக்கும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் உறுதுணையாக இருப்பதோடு, உந்து சக்தியாகவும் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக தங்களது குறைகளை சங்க பிரதிநிதிகளிடம் எடுத்துக்கூறி, அந்த குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்து வந்து நிவர்த்தி செய்கிறார்கள். எனவே மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாமல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி முதல் மார்ச் மாதம் வரை பொதுமக்களுக்கு வாக்களிப்பது தொடர்பாக பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதன்முதலில் ஆர்வத்தோடு கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக இந்த விழிப்புணர்வு பேரணியை பொதுமக்கள் பார்த்து மக்கள் அதிகமாக வாக்களிப்பதற்கு முன்வருவார்கள் என நம்புகிறேன் என்ற கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
பேரணி பாளையங்கோட்டை ரோடு, வழியாக தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பேரணியை நிறைவ செய்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், பேச்சுப் பயிற்சியாளர் ராஜேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை சேர்ந்த பேர்சில், ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.