கோவையில் அரசு பஸ் ஆட்டோ மோதல் 3 பேர் பரிதாப சாவு
கோவையில் அரசு பஸ், ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை
கோவையில் அரசு பஸ், ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஸ்-ஆட்டோ மோதல்
கோவையை அடுத்த பேரூர் மாதம் பட்டியில் இருந்து நேற்று மாலை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் நோக்கி எஸ்-4 என்ற வழித்தடம் கொண்ட அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் சவுரிபாளையம் கவுண்டர் வீதி பகுதியில் சென்ற போது எதிரே உப்பிலிபாளையத்தில் இருந்து சவுரிபாளையத்தை நோக்கி வந்த ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதைப் பார்த்ததும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து, நொறுங்கிய ஆட்டோவுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 பேர் பலி
இதற்கிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர்கள் சரவணன், அருண், இன்ஸ்பெக்டர்கள் விக்னேஸ்வரன், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு பிணமாக கிடந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் விபத்தில் இறந்தது கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 57), கிருஷ்ணா நகரை சேர்ந்த இசக்கிமுத்து (27), கலைவாணன் (28) ஆகியோர் என்பதும் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்த விபத்தில் உடையாம்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கவுதம் என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.