கர்நாடகத்தில் புதிதாக எத்தனால் கொள்கை உருவாக்கப்படும் - பசவராஜ் பொம்மை தகவல்
கர்நாடகத்தில் புதிதாக எத்தனால் கொள்கை உருவாக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
சர்க்கரை ஆலை
ஹாவேரி மாவட்டம் சிட்டலப்பாக்கம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் சர்க்கரை ஆலையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அங்கு நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:-
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை பதப்படுத்திய பிறகு அதன் மதிப்பு உயர்ந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இந்த சர்க்கரை ஆலையால் இந்த பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் பயன் பெறுவார்கள். மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார நடவடிக்கைகள், விவசாயிகளின் நலனை காத்தல் ஆகியவற்றை இலக்காக கொண்டு எத்தனால் கொள்கையை வகுத்துள்ளது. கர்நாடக அரசும் புதிதாக எத்தனால் கொள்கையை உருவாக்க முடிவு செய்துள்ளது.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை
இதனால் விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும். ஒரு சில சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆலைகளில் கரும்பு, நெல் போன்றவற்றில் இருந்தும் எத்தனால் உற்பத்தி செய்ய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் சர்க்கரை ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகளின் குழந்தைகள், இளைஞர்களுக்கு இதன் மூலம் பயன் கிடைக்கும். எனது தொகுதியான இந்த சிக்காவி தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அடிப்படை வசதிகள், கல்வி, தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை தொடங்கி வருகிறோம். இங்கு பின்னலாடை தொழில், ஜவுளி உற்பத்தி பூங்கா போன்றவை தொடங்கப்பட உள்ளது. பெங்களூருவில் தொழில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதனால் பெங்களூருவை தாண்டி மாநிலத்தின் பிற பகுதிகளில் தொழில்களை தொடங்க அரசு ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் நலனுக்காகவும், அவர்கள் சுய மரியாதையுடன் வாழவும் இத்தகைய தொழில் நிறுவனங்கள் இந்த பகுதியில் அமைக்கப்படுகிறது.
பால் கூட்டமைப்பு
ஹாவேரி மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகமாக உள்ளது. அதன் காரணமாக இந்த மாவட்டத்திற்கு தனியாக ஒரு பால் கூட்டமைப்பு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்க்கையை மேம்படுத்த அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. கர்நாடக பால் கூட்டமைப்பு கிளையை இங்கு தொடங்க ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.20 கோடி செலவில் பால் பதப்படுத்தும் மையம் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.