கர்நாடகத்தில் பா.ஜனதா தொண்டர்களை போல் செயல்படும் போலீசார் - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் போலீசார் பா.ஜனதா தொண்டர்களை போல் செயல்படுவதாக டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2022-02-13 21:25 GMT
கதக்:

  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கதக்கில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீக்கி இருப்போம்

  மந்திரி ஈசுவரப்பா, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடிக்கு பதிலாக காவிக்கொடி ஏற்றுவதாக கூறுகிறார். அத்தகையவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கவர்னர் மந்திரிசபையில் வைத்து கொண்டுள்ளனர். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால், அத்தகைய மந்திரியை பத்தே நிமிடங்களில் நீக்கி இருப்போம். போலீசார் அரசு அதிகாரிகளாக பணியாற்றவில்லை. அதற்கு பதிலாக பா.ஜனதா தொண்டர்களை போல் செயல்படுகிறார்கள். இது நிரந்தரம் அல்ல. யார்-யார் பா.ஜனதா தொண்டர்களாக பணியாற்றுகிறார்களோ அவர்களுக்கு எப்போது பதிலளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

  கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கர்நாடகம் மற்றும் தேசிய அளவில் மாற்றத்திற்கான காற்று வீசத் தொடங்கியுள்ளது அதனால் தான் நாங்கள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கியுள்ளோம். ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் அரசு செயல்பட்டுள்ளது. தொடக்கத்திலேயே இந்த பிரச்சினையை சுமுகமாக முடித்து இருக்கலாம். ஆனால் அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை. டெல்லியில் போராடிய விவசாயிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீவிரவாதிகள் என்று குறை கூறினார்.

களங்கம் ஏற்படுத்த முயற்சி

  ஹிஜாப் விவகாரத்தில் பதற்றம் ஏற்பட்டதால் பள்ளி-கல்லூரிகளை மூட வேண்டும் என்று நானே வலியுறுத்தினேன். நாட்டிற்கு அதிகம் வரி செலுத்துவதிலும், மனித வளத்தை உருவாக்குவதிலும் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. இதற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் முயிற்சி செய்கிறார்கள். நாம் கர்நாடகத்தின் கவுரவத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் நாங்கள் சிறுபான்மை இன மக்களை பாதுகாத்து வருகிறோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்