ஆத்தூர் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
ஆத்தூர் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 57). இவர் வீட்டுக்கு செல்லும் வழியில் பிள்ளையார் கோவில் அருகே குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தை தாண்டி தான் தங்கராசு தனது வீட்டுக்கு செல்ல வேண்டும். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வரும்போது அந்த குளத்தில் அவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டார். இதில் குளத்தில் மூழ்கி தங்கராசு பலியானார்.
இதனிடையே அவரது குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் இரவு அவர் வீட்டுக்கு வராததால் அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால் தங்கராசுவை காணாத நிலையில், நேற்று காலை குளத்தில் அவரது உடல் மிதப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தங்கராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தங்கராசுவின் மனைவி மயில் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.