மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது- சின்ன தேரோட்டம் நாளை நடக்கிறது

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சின்ன தேரோட்டம் நாளை நடக்கிறது.

Update: 2022-02-13 21:24 GMT
மேச்சேரி:
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சின்ன தேரோட்டம் நாளை நடக்கிறது.
பத்ரகாளியம்மன் கோவில்
மேச்சேரியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இங்கு அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான மாசிமக தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு பொங்கபாலியில் இருந்து சக்தி அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலில் கொடியேற்றம் நடந்தது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சின்ன தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. கோவிலில் இருந்து விநாயகர் தேர் முன்னே செல்ல, தொடர்ந்து சின்ன தேர் புறப்பாடு நடக்கிறது. சின்ன தேரோட்டம் கிழக்கு கோபுரம், சந்தைப்பேட்டை, கிராம சாவடி, மேற்கு கோபுரம் வழியாக கோவிலை வந்தடைகிறது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) பெரிய தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை விநாயகர் தேரும், பின்னால் பெரிய தேரும் கோவிலில் இருந்து புறப்பட்டு மேற்கு ரத வீதி சென்று கிராம சாவடி அருகில் நிறுத்தப்படுகிறது. பின்பு அங்கிருந்து வருகிற 17-ந் தேதி விநாயகர் தேர், பெரிய தேர் கோவில் நிலைக்கு வந்து சேரும்.
மஞ்சள் நீராட்டுதல்
18-ந் தேதி இரவு சத்தாபரணம் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பத்ரகாளியம்மன் எழுந்தருளி பொங்க பாலியிலிருந்து வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 19-ந் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்