நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க.வின் சவாலை ஏற்க மறுப்பது ஏன்?-சேலம் தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க.வின் சவாலை ஏற்க மறுப்பது ஏன்? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலம்:
நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க.வின் சவாலை ஏற்க மறுப்பது ஏன்? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
சேலம் மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 60 வேட்பாளர்களை ஆதரித்து கோட்டை பகுதியில் நேற்று மாலை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சேலம் மாநகராட்சி எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. அதைப்போல் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் 60 கோட்டங்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஒருவர் மேயராக வேண்டும்.
பொம்மை ஆட்சி
கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் மாநகராட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த 9 மாதங்களாக நடக்கும் தி.மு.க. ஆட்சியில் எவ்வித திட்டமும் நடைபெறவில்லை. தேர்தலுக்கு பின்பு மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழகத்தில் பொம்மை ஆட்சிதான் நடக்கிறது. திறமையில்லாத முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை தான் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார்.
சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எவ்வித புதிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. சார்பில் 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. நிறைவேற்ற முடியாத திட்டங்களை மு.க.ஸ்டாலினும், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் கவர்ச்சியாக பேசினார்கள். அதை மக்களும் நம்பி அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் தி.மு.க. மக்களை மறந்து விட்டது.
நீட் தேர்வு
நீட் தேர்வு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சவால் விடுகிறார். நீட் தேர்வு யார்? ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என மக்களுக்கு நன்றாக தெரியும். கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக குலாம் நபி ஆசாத்தும், அத்துறையின் இணை மந்திரியாக நாமக்கல்லை சேர்ந்த காந்திசெல்வனும் பதவி வகித்தார்கள். இதை யாராலும் மறுக்க முடியுமா?.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வை வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்தார். அனிதா தற்கொலை பற்றி பேசினார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 9 மாதங்களாக எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியுமா?
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களையும், இளைஞர்களையும் தி.மு.க. ஏமாற்றுகிறது. நீட் தேர்வு எந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தி.மு.க. விடுத்த சவாலை நானும், ஓ.பன்னீர்செல்வமும் ஏற்க தயார் என்று மதுரையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தேன். எந்த இடத்தில் விவாதம் வைத்து கொள்ளலாம் என்று நீங்களே கூறுங்கள். அங்கு நாங்கள் வருகிறோம். அங்கு மக்கள் நடுவர்களாக இருந்து தீர்ப்பு அளிக்கட்டும்.
ஆனால் நீட் தேர்வு விவகாரத்தில் நாங்கள் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை. மக்களிடம் நெஞ்சை நிமிர்த்தி செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களது சவாலை ஏற்க மறுப்பது ஏன்?.
மத்திய அரசிடம் விருதுகள்
தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியது அ.தி.மு.க. ஆட்சி தான். யாருமே கோரிக்கை வைக்காத பட்சத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு 541 ஏழை மாணவர்கள் டாக்டர்களாக உருவாகி வருகிறார்கள். மேலும் அவர்களது மருத்துவ கல்விக்கட்டணத்தையும் ஏற்பதாக நாங்கள் அறிவித்தோம். மருத்துவம் மட்டுமின்றி கல்வி, விவசாயம், போக்குவரத்து, தொழில் என பல்வேறு துறைகளில் மத்திய அரசிடம் இருந்து விருதுகள் பெறப்பட்டது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தி.மு.க.வினர் சதி திட்டம் தீட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, ஆளுங்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கைப்பாவையாக இல்லாமல் நடுநிலையோடு ஜனநாயகப்படி தேர்தலை நடத்த வேண்டும்.
ஸ்டாலின் பொய் பேசுகிறார்
சேலம் மாநகராட்சி பகுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.968 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலைகள், தனி குடிநீர் திட்டம், 11 அம்மா உணவகங்கள், 17 பசுமை வெளிப்பூங்காக்கள், பாதாள சாக்கடை திட்டம் என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் சேலத்துக்கு நாங்கள் எதையும் செய்யவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பேசுகிறார். பொய் பேசுவது அவருக்கு கை வந்த கலையாகும். கடந்த 9 மாதங்களில் நீங்கள் என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்?. இதற்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்து வருகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.