தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டினர்
தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டினர்.
தாளவாடி
தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டினர்.
கரும்பு தோட்டம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி அருகே வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.
சேதப்படுத்திய யானைகள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள் வெளியேறின. பின்னர் குமாரின் கரும்பு தோட்டத்துக்குள் யானைகள் புகுந்தன. அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த கரும்பை தின்றும், மிதித்தும் நாசப்படுத்த தொடங்கின.
சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் இருந்த குமார் சென்று பார்த்தார். அதிர்ச்சி அடைந்த அவர் பக்கத்து தோட்டத்து விவசாயிகளிடம் கூறினார். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கு திரண்டனர். அதன்பின்னர் அனைவரும் பட்டாசு வெடித்து யானைகளை அங்கிருந்து காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்ல வில்லை. தொடர்ந்து கரும்புகளை சேதப்படுத்தி வந்தன.
1½ ஏக்கர் நாசம்
சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் யானைகள் காட்டுக்குள் சென்றன. யானைகளால் 1½ ஏக்கர் கரும்பு பயிர் சேதமடைந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறும்போது, ‘சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும்’ என்றனர்.