அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் முறிவு ஏற்படவில்லை

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் முறிவு ஏற்படவில்லைஎன முன்னாள் மத்திய இணைமந்திரியும், மாநில பா.ஜ.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-02-13 20:20 GMT
விருதுநகர், 
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் முறிவு ஏற்படவில்லைஎன முன்னாள் மத்திய இணைமந்திரியும், மாநில பா.ஜ.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 
வாக்குறுதி 
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்  கூறியதாவது:- 
மக்கள் நம்பக்கூடிய அளவில் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை தந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த காலத்திலும் தற்போதும் அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 
தேசிய ஜனநாயக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு விடவில்லை. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்கள் பலத்தை பெருக்கிக் கொள்ள தனித்தனியே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். இரு கட்சிகளும் பலத்தை பெருக்கிக்கொண்டால் கூட்டணி பலம் பெருக வாய்ப்பு ஏற்படும்.
சீருடை திட்டம் 
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். பா.ஜ.க.வுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக ஆதரவு பெருகியுள்ளது. விருதுநகரில் கடந்த 2001-ம் ஆண்டு நகராட்சியில் பா.ஜ.க.வுக்கு கவுன்சிலர் பதவியை தந்த நகராட்சி ஆகும். பெருந்தலைவர் பிறந்த மண்ணிலிருந்து பேசுகிறோம். பெருந்தலைவர் காமராஜர் பள்ளிகளில் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதற்காக சீருடை திட்டத்தைக் கொண்டு வந்தார்.
 அந்த வகையில் பள்ளிகளில் எந்த உடை அணிய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகம் தான். இதை தேவை இல்லாமல் அரசியலாக்க கூடாது. 
இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கஜேந்திரன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் பாண்டுரங்கன் ஆகியோர் உடனிருந்தனர். 
முன்னதாக அவர் விருதுநகரில் நகராட்சிக்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். 
சிவகாசி 
அதேபோல சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து  பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு மாரியம்மன் கோவில் அருகில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாதம் ஆகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 தருவோம் என்று தி.மு.க. தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. அந்த அறிவிப்பு என்ன ஆச்சு? கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் ரூ.2,500 வழங்கப்பட்டது. இதை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும் என்று அப்போது தி.மு.க. வலியுறுத்தியது.
 ஆனால் இப்போது தமிழகத்தில் தி.மு.க. தான் ஆட்சி செய்கிறது. பொங்கலுக்கு 5 பைசா கூட தரவில்லை. தமிழக அரசு சார்பில் 21 பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக கொடுக்கப்பட்டது. சில இடங்களில் 22 பொருட்களாக பல்லி, பாச்சானும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
பா.ஜ.க. கைப்பற்றும் 
சிவகாசி மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றும். சிலர் அடியாட்களை வைத்து தேர்தல் வேலை செய்து வரு கிறார்கள். விஷப்பரிட்சைக்கு இறங்கினால் அதையும் நாங்கள் சந்திக்க தயார். 
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் சக்தி படைத்த வர்கள் சிவகாசிக் காரர்கள் என்பதை இந்த தேர்தலில் நீங்கள் நிரூபியுங்கள். உங்கள் வாக்குகளை தாமரை சின்னத்துக்கு அளியுங்கள். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்