வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க. வேட்பாளரின் மாமியார் கைது
மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க. வேட்பாளரின் மாமியார் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க. வேட்பாளரின் மாமியார் கைது செய்யப்பட்டார்.
பணம் பட்டுவாடா
மதுரை காமராஜர்சாலை சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும்படை தாசில்தார் சிவக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த அரியநாச்சி (வயது 67) என்ற பெண் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளரின் மாமியார்
அவரிடம் இருந்த ரூ.8 ஆயிரத்து 500, செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அரியநாச்சி, அப்பகுதியில் மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரின் மாமியார் என போலீசார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.