தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குரங்குகள் தொல்லை
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா மேலவாளாடி தெற்குசத்திரம் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகிறது. இந்த குரங்கள் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடிக்க பாய்ந்து வருகிறது. மேலும் வீடுகளுக்குள் புகுந்து அங்கு பொருட்களை சேதப்படுத்துகிறது. இதனால் தெருவில் பொதுமக்கள் நடக்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருகி்ன்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேகலா அறிவழகன், மேலவாளாடி, திருச்சி.
வேகத்தடைகளால் விபத்து
திருச்சியில் இருந்து முசிறி வழியாக நாமக்கல், சேலம், ஈரோடு போன்ற ஊர்களுக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில் அபாயகரமான வளைவுகள் மற்றும் அதிகமான வேகத்தடைகள் உள்ளன. இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பெங்களூர் போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்தசாலைகளை அகலப்படுத்தி வளைவுகளை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.சுந்தர், திருச்சி.
கழிவுநீரால் துர்நாற்றம்
திருச்சி தென்னூர் அண்ணாநகர் 29-வது வார்டு சின்னசாமி நகர் சி. பிளாக் தெருவில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து கடந்த 20-நாட்களுக்கும் மேலாக தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் சென்று விடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ்குமார், தென்னூர், திருச்சி.
சாக்கடையில் அடைப்பு
திருச்சி மேலசிந்தாமணி நாட்டார் சந்திலிருந்து பாதாள சாக்கடை இணைப்பு பழைய கரூர் ரோட்டில் இணைகிறது. மேற்படி இணைப்பில் அடைப்பு ஏற்பட்டு எதிரே உள்ள தெருக்களிலும், வீடுகளின் உள்ளேயும் சாக்கடை நீர் வடிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகராஜன், திருச்சி.
மேம்பாலத்தில் ஆக்கிரமிப்பு
திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சிக்கு உட்பட்ட மேம்பாலத்தில் இருபுறமும் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அதிகளவில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து சீராக நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், லால்குடி, திருச்சி.
பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
திருச்சியில் இருந்து நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் பெரும்பாலும் பயணநேரத்தை குறைக்கும் பொருட்டு திருச்சி பால்பண்ணை பகுதிக்கு வராமல் மேம்பாலத்தின் மேலே சென்று விடுகின்றன. அதனால் மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல பால்பண்ணையில் காத்திருக்கும் பயணிகள் பஸ் வராமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக மாலை நேரத்தில் பணிக்கு சென்று திரும்பும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடராஜன், திருச்சி.
சாலை விரிவுபடுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், எதுமலை முதல் பெரகம்பி வரையிலான 6 கிலோ மீட்டர் சாலை நெடுஞ்சாலைத் துறையால் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் இடையில் உள்ள 3 கிலோ மீட்டர் வனச்சாலை சரி செய்யாமலும், சாலை விரிவு படுத்த படாமலும் உள்ளதால் அதனை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எதுமலை, திருச்சி.