மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்ததால் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
குலசேகரம்:
குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்ததால் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
குலசேகரம் அருகே உள்ள வடக்கு கொட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42), தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் இரவில் உணவு சாப்பிட்டு விட்டு தூங்க செல்லும் முன்பு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அந்த சமயத்தில் ரப்பர்மரம் ஒன்று முறிந்து மின்கம்பியில் விழுந்து மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத சுரேஷ் மின்கம்பியில் மிதித்துள்ளார்.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது தாய் வள்ளி, சுரேஷ் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இதையடுத்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.