பனை விதைகள் விதைக்கும் பணி தீவிரம்
பூம்புகார் பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை வேளாண்மை உதவி இயக்குனர் தொடங்கி வைத்தார்.
திருவெண்காடு:
பூம்புகார் பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை வேளாண்மை உதவி இயக்குனர் தொடங்கி வைத்தார்.
பனை விதைகள் விதைப்பு
காவிரி பூம்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட நெய்தவாசல், கடைகாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக வேளாண்துறை சார்பில் பனை மரங்கள் மேம்பாடு திட்டத்தின் கீழ் பனை விதைகள் விதைப்பு பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவரும், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சசிகுமார் தலைமை தாங்கினார். பூம்புகார் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி ராஜா முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி அலுவலர் வேதைராஜன் வரவேற்றார். இதில் சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் கலந்துகொண்டு பனை விதை விதைப்பு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
அன்னிய செலாவணி கிடைக்கிறது
அப்போது அவர் கூறுகையில், பனைமரங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக விளங்குகிறது என்றால் மிகையாகாது. இந்த மரங்களை வளர்ப்பதன் மூலம் மழைநீர் சேகரிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மழை காலங்களில் ஏரிகள், குளங்களின் கரைகள் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. இயற்கை இடர்பாடுகள், சுனாமி மற்றும் புயல் காலத்தில் ஏற்படும் மாற்றங்களை பனைமரங்கள் குறைக்கின்றன. இதன் மூலம் பதநீர், வெல்லம், சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.
இதன் மட்டை கயிறு, நார் தயாரிக்கவும், விறகுக்கும் பயன்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டுவதன் மூலம் அன்னிய செலாவணி கிடைக்கிறது. வேளாண்மைத்துறை மூலம் 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை விவசாயிகள் பயன் படுத்தி கொண்டு, பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வேளாண்மை அலுவலர் சின்னண்ணன், உதவி வேளாண்மை அலுவலர் அலெக்சாண்டர் உள்பட திரளான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.