ஆலயத்தில் நகைகள் உண்டியல் பணம் கொள்ளை
குளச்சலில் உள்ள ஆலயத்தில் தங்க நகைகள்-உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஜன்னல் கம்பியை வளைத்து துணிகர செயலில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
குளச்சல்:
குளச்சலில் உள்ள ஆலயத்தில் தங்க நகைகள் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஜன்னல் கம்பியை வளைத்து துணிகர செயலில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
காணிக்கை மாதா ஆலயம்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் குளச்சலில் உள்ள புனித காணிக்கை மாதா ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் சில நாட்களுக்கு முன்பு தான் திருவிழா முடிந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் ஆலயத்துக்கு வழக்கம் போல் அந்த பகுதி மக்கள் சென்றனர். அப்போது ஆலயத்தின் ஒரு பகுதியில் உள்ள ஜன்னல் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் ஆலயத்துக்கு வந்து பார்த்த போது, 2 பெரிய உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் ஆலயத்தின் உள்ளே அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா துணி போட்டு மூடப்பட்டு இருந்தது.
கொள்ளை
அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஆலயத்தில் மாதா சொரூபத்தில் இருந்த 2 தங்க சங்கிலிகள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் 2 உண்டியல்களில் இருந்த பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டதாக நிர்வாகி தெரிவித்தார்.
ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்
ஆலயத்தின் உள்ளே அமைக்கப்பட்டு இருந்த கேமரா மீது துணி போட்டு மூடி இருந்ததால், வந்தவர் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. அதைத்தொடர்ந்து ஆலயத்தின் அருகில் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் மூகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்த நபர் வடக்கு பக்கம் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து துண்டித்து ஆலயத்தின் உள்ளே நுழைந்தது பதிவாகி இருந்தது. அவர் உடல் முழுவதும் மறைத்து இருந்தார். பின்னர் அதிகாலை 3 மணிக்கு தான் அவர் வெளியே வந்தார். எனவே அவர் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என போலீசார் கருதுகிறார்கள்.
கடந்த ஆண்டு திருவிழா முடிந்ததும் உண்டியல் பணத்தை எண்ணிய போது ரூ.4½ லட்சம் இருந்ததாகவும், எனவே 2 உண்டியல்களிலும் ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் இருந்திருக்கலாம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மோப்பநாய்
ஆலயத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது ஆலயத்தில் மோப்பம் பிடித்துவிட்டு வெளியே ஓடி கடற்கரை சாலைக்கு சென்று நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் ஆலயத்தில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளையில் உள்ளூர் நபர் ஈடுபட்டாரா? அல்லது வெளியூரில் இருந்து யாரும் வந்து கொள்ளையடித்து உள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.