பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்கும் விவசாயிகள்

கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தில் பழந்தின்னி வவ்வால்களை விவசாயிகள் பாதுகாத்து வருகிறார்கள்.

Update: 2022-02-13 18:03 GMT
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தில் பழந்தின்னி வவ்வால்களை விவசாயிகள் பாதுகாத்து வருகிறார்கள். 
பெரம்பூரில் வசிக்கும் 
வவ்வால்கள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சி பெரம்பூர் கிராமத்தில் வயல்வெளிகள் நிறைந்த பகுதியில் ஒரு ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தில் வவ்வால்கள் உள்பட பல்வேறு பறவைகள் அதில் வசித்து வருவதால் எப்போதும் பறவைகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
இந்த ஆலமரத்தில் பழந்தின்னி வவ்வால்கள் அதிக அளவில் உள்ளன.  இந்த பகுதியில் காணப்படும் பழந்தின்னி வவ்வால்கள் ஒவ்வொன்றும் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை உள்ளன.
விவசாயிகளின் நண்பனாக
இந்த வவ்வால்களின் உருவங்களை பார்த்தால் நரியை போன்ற தோற்றம் இருக்கும். இது இரவு நேரங்களில் உணவுக்காக சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் சென்று உணவை சேகரித்து விட்டு விடிவதற்குள் பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஆலமரத்திற்கு வந்து சேர்ந்துவிடும். முப்போக சாகுபடி செய்யப்படும் இந்த பகுதி விளைநிலங்களில் வவ்வால்கள் இடும் எச்சங்கள் உரங்களாக பயன்படுகிறது.
பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு வவ்வால்கள் மூலம் பரவுவதாக தெரிவித்த நிலையில், அந்த பகுதியினர், விவசாயிகளின் நண்பனாக இந்த வவ்வால்களை பாதுகாத்து வருகின்றனர். 
வவ்வாலடியை பாதுகாத்து வருகிறோம்
இதுகுறித்து அந்தபகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், குன்னம் கிராமத்தில் ஒரு ஆலமரத்தை தேர்வு செய்து அங்கேயே பழந்திண்ணி வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. மற்ற இடங்களில் எங்கும் அந்த வவ்வால்கள் தங்குவது இல்லை. வவ்வால் வாழ்வதற்கான சுற்றுச்சூழல் அந்த இடத்தில் இருப்பதால் அந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசித்து வருகின்றன. எனவே எங்கள் பகுதி கிராம மக்கள் அனைவரும் அந்த இடத்தை வவ்வாலடி என்று பெயரிட்டு பாதுகாத்து வருகிறோம்.
வெளி நபர்கள் அதிகமாக அந்த பகுதிக்கு வந்தால் வவ்வால்களை வேட்டை ஆடாமல் தடுக்க எங்கள் கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாதுகாத்து வருகின்றார்கள் என்றனர்.

மேலும் செய்திகள்