நாமக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் இதுவரை 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-02-13 17:58 GMT
நாமக்கல்:
பசுமை நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரித்து ஆண்டுதோறும் தொடர்ச்சியாகவும், இயற்கையாகவும் மழைபெறும் நிலையை உருவாக்க பசுமை நாமக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரம் வளர்க்கும் ஆர்வலர்கள், அரசு துறைகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், வங்கியாளர்கள் மூலமாக கோவில் நிலங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சாலைகள், பயன்பாடற்ற நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கலெக்டர் ஆய்வு
மோகனூர் ஒன்றியம் அரூர் ஊராட்சி, ஆண்டாபுரம் ஊராட்சி, வளையப்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு, வளர்க்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அரூர் ஊராட்சி ஈச்சங்கோவில்பட்டி கிராமத்தில் ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, நீரூற்றி பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் கசிவுநீர் குட்டை அமைக்கும் பணி முடிவுற்று உள்ளதையும் பார்வையிட்டார். 
மேலும் மரக்கன்றுகளை தொடர்ந்து நீருற்றி வளர்ப்பதற்காக ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.
மூலிகை செடிகள்
தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அரூர் ஊராட்சி ஆலாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் 560 எண்ணிக்கையிலான மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், சுக்காம்பட்டி வாரியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் தொடர்ச்சியான இடைவெளியில் சிறுபள்ளங்கள் ஏற்படுத்தும் பணி ரூ.12 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது அவர் மூலிகை செடிகளை முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
4 லட்சம் மரக்கன்றுகள்
மேலும் ஆண்டாபுரம் ஊராட்சியில் ரூ.18 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறுவதையும், வளையப்பட்டி ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் நிலத்தை சீரமைத்து, குழிகள் தோண்டி மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார். 
இதை தொடர்ந்து அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் இதுவரை 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகள் நடுவதோடு இல்லாமல் தொடர்ந்து நீரூற்றி பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வரும் ஆண்டுகளில் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பரவலாகவும், சீராகவும் மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்