தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்த கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம், அரணாரை கிராமத்தில் இதுநாள் வரை எந்த ஒரு வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை. மேலும், இக்கிராமத்தில் பஸ் வசதி, ரெயில் நிலையம், கால்நடை மருத்துவக்கல்லூரி, பிற அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் வரும் என பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் எந்த திட்டங்களும் வரவில்லை. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அரணாரை கிராமத்தில் உடனடியாக வளர்ச்சி திட்ட பணிகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வக்குமார், அரணாரை, பெரம்பலூர்.
வீணாகும் குடிநீர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம் நொடியூர் ஊராட்சி சோளகம்பட்டி காலனித்தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் தொட்டியில் ஓட்டை விழுந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுபற்றி பலமுறை ஊராட்சி தலைவர் மற்றும் செயலரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை... இதனை உடனடியாக சரிசெய்து குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன்..
பொதுமக்கள், சோளகம்பட்டி, புதுக்கோட்டை.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி வட்டம்,கோங்குடி ஊராட்சி, கோங்குடி கிராமத்தில் குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,அறந்தாங்கி, புதுக்கோட்டை
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், வடசேரி பஞ்சாயத்து, காவல்காரன்பட்டியில் இருந்து பாலசமுத்திரப்பட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், தோகைமலை, கரூர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் தெம்மாவூரில் இருந்து பழையூர் வரை உள்ள சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த மண்சாலையை தார் சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகுல், தெம்மாவூர், புதுக்கோட்டை.
மயானத்தில் முளைத்துள்ள செடி, கொடிகள்
கரூர் மாவட்டம் நடையனூர் , கொட்டையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இறந்தவர்களை புதைப்பதற்காகவும், எரிப்பதற்காகவும் நடையனூரிலிருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலையின் ஓரத்தில் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. மயானம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மயானத்திற்குள் ஏராளமான செடிகள், கொடிகள் முளைத்துள்ள து. இதன் காரணமாக இறந்தவர்களை உடனடியாக புதைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மயானத்தில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நடையனூர், கரூர்.