தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
போக்குவரத்துக்கு இடையூறு
பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளன. வணிக வளாகங்களில் வாகன நிறுத்துமிடம் இல்லாததால் வாகனங்களை ரோட்டில் நிறுத்த வேண்டிய உள்ளது. இதனால் கடைகளுக்கு வருவோர் வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கு கூட வழி இருப்பதில்லை. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று வாகன நிறுத்தும் இடம் இல்லாத வணிக வளாகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், சூளேஸ்வரன்பட்டி.
பஸ் வந்து செல்லுமா?
நெகமம் தாராபுரம் ரோட்டில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் 500- க்கும் மேற்பட்ட வெளியூர் மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள், பொது மக்கள், வந்து செல்கின்றனர். மேலும் உள்ளூர் வியாபாரிகள், பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இங்கிருந்து பொள்ளாச்சி, உடுமலை, கோவை ஆகிய பகுதிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். ஆனால் இந்த பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வருவதில்லை. சாலையோரத்தில் நிறுத்தி பயணிகள் இறக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே அனைத்தும் பஸ்கள் நெககம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல், நெகமம்.
தடுப்புச்சுவரை பலப்படுத்த வேண்டும்
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை பி.ஏ.பி.வாய்கால் மேல் சிறு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் வழியாக பொள்ளாச்சி, ஜல்லிபட்டி, பெதப்பம்பட்டி, உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. தற்போது பாலத்தின் மேல் உள்ள தடுப்பச்சுவர் அடிக்கடி வாகனங்கள் மோதுவதால் பலமிழந்துவிடுகிறது. இதனால், கனரக வாகனங்கங்கள் எதிர்பாரதவிதமாக தடுப்பு சுவரில் மோதினால் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், சுல்தான்பேட்டை.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகில் பெரியார் நகர் பகுதிக்குச் செல்லும் வழியில் அந்தப் பகுதி மக்கள் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு குப்பைகளில் இருந்து நோய்க் கிருமிகள் பரவுகிறது. மேலும் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணகுமார், கிணத்துக்கடவு.
ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்
கோவை நியூ சித்தாபுதூர் பகுதியில் சங்கனூர் ஓடையில் பொது மக்கள் தினந்தோறும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சங்கனூர் ஓடையில் சாக்கடை கழிவுநீர் முறையாக செல்லாமல் ஆங்காங்கே தேங்குகிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே ஓடையில் சாக்கடை கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
அன்பு, கோவை.
நிழற்குடை வேண்டும்
கோவை-பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பிரிவில் இருந்த பயணிகள் நிழற்குடை சாலை விஸ்தரிப்பு பணியால் அகற்றப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்து வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் சொலவம் பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்குடை மட்டும் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கால்கடுக்க வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து நிழற்குடை அமைக்க வேண்டும்.
சிவக்குமார், சிக்கலாம்பாளையம்.
ஆபத்தான மின்கம்பம்
கோவை வெள்ளானைப்பட்டி -நீலாம்பூர் செல்லும் சாலையில் மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் உடைந்து எல் வடிவ நிலையில் சாய்ந்தபடி இருக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் கீழே சரிந்து விபத்து ஏற்படக்கூடிய அபாய நிலை இருக்கிறது. இந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதால், பயத்துடன் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
லோகநாயகி, வெள்ளானைப்பட்டி.
நடக்க முடியாத நடைபாதை
பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1-ல் இரண்டுலைன்ஸ் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் நடைபாதை உள்ளது. இது உடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து நடைபாதையை சீரமைக்க வேண்டும்.
சதாசிவம், நெல்லியாளம்.