கடன் தொல்லையால் விஷம் குடித்த தம்பதி
போடி அருகே கடன் தொல்லையால் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில் சிகிச்சை பலனின்றி மனைவி பலியானார்.
போடி:
போடி அருகே உள்ள அம்மாபட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). விவசாயி. அவருடைய மனைவி பேச்சியம்மாள் (55). இவர்களுக்கு தினேஷ்குமார் (32) என்ற மகன் உள்ளார். கருப்பையா கடன் வாங்கி வீடு கட்டியதாக கூறப்படுகிறது. அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் தனது மகனிடம் கடனை திருப்பி செலுத்தும்படி கருப்பையா கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் இதுகுறித்து எந்த தகவலும் சொல்லவில்லை. இதனால் கணவன்-மனைவி 2 பேரும் மனமுடைந்து காணப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி வீட்டில் தம்பதி இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சியம்மாள் இறந்தார். கருப்பையாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.