ஆபத்தான நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்
கங்களாஞ்சேரி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திட்டச்சேரி:
கங்களாஞ்சேரி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கிராம நிர்வாக அலுவலகம்
நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த அலுவலகம் கங்களாஞ்சேரி, வருவாய் கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலகமாகவும், கங்களாஞ்சேரி, வாழ்குடி, விற்குடி, கொட்டாரக்குடி, பில்லாளி, திருப்பயத்தங்குடி உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
ஆவணங்கள் சேதம்
இந்த அலுவலக கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம் எந்தவித பராமரிப்பும் இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது.
மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் கட்டிடத்துக்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது. இங்கு பணிபுரியும் அலுவலர்கள் அச்சத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இடிக்க வேண்டும்
தற்போது ஆன்லைனில் பல்வேறு சான்றிதழ்களை பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தாலும் பல சான்றிதழ்கள் நேரில் சென்று வாங்க வேண்டி உள்ளதால் மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் அலுவலகத்துக்கு வந்து செல்கிறார்கள். சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.