கரைவலையில் அதிக மீன்கள் கிடைத்தும் விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம்
கரைவலையில் அதிக மீன்கள் கிடைத்தும் விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேசுவரம்,
மீன்பிடி தொழிலில் பலவித முறைகள் மற்றும் பெரிய படகுகள் வந்துள்ள நிலையிலும் தனுஷ்கோடி பகுதியில் பாரம்பரிய கரை வலை மீன்பிடிப்பில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் நேற்று 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைவலை மீன் பிடிப்பில் ஈடுபட்டு இருந்தனர். கடலில் இருந்து பலவகை மீன்களுடன் கரைக்கு இழுக்கப்பட்ட வலையில் சூடை, பாறை, முரள், குத்தா உள்ளிட்ட பலவகை மீன்கள் சுமார் ஒரு டன்னுக்கும் அதிகமாக சிக்கி இருந்தன. கரை வலையில் சிக்கிய மீன்களை சரக்கு வாகனம் மூலம் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி மீனவர் முனியசாமி கூறியதாவது:-
தனுஷ்கோடி தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்த ஆண்டு கரைவலை மீன்பிடிப்பு சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காமல் மிகவும் குறைந்த அளவில் தான் கிடைத்து வந்தது. தற்போது தான் கரைவலை மீன்பிடிப்பில் ஒரு டன்னுக்கும் அதிகமாக மீன்கள் கிடைக்கின்றன. ஆனால் மீன்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.