தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-13 16:08 GMT
புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூா் தெற்கு தெரு அம்பேத்கர் நகர் சந்தன மாரியம்மன் கோவில் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. இதுதொடர்பாக மருதம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நேற்றே அந்த குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கடம்பன்குளத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த பகுதியில் வங்கி, ஏ.டி.எம். மையம் இல்லை. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு பணம் எடுப்பதற்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூலைக்கரைப்பட்டிக்கு சென்று தான் வங்கி அல்லது ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கடம்பன்குளத்தில் ஏ.டி.எம். மையம் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
மணிகண்டன், மூலைக்கரைப்பட்டி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

பாளையங்கோட்டை மகாராஜநகர் 1-வது குறுக்குத்தெரு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 1½ மாதங்களாக பாதாள சாக்கடை  தொட்டி உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதில் ஏராளமான வாகனங்கள் செல்வதால் அந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே பாதாள சாக்கடை தொட்டி, சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலன், மகாராஜநகர்.

கிலோ மீட்டர் குறிப்பிடப்படுமா? 

தென்காசி மாவட்டம் கடையம் எஸ்.பி.ஐ. வங்கி எதிரே அம்பை-தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை உள்ளது. இந்த பலகையில் தென்காசி, செங்கோட்டை என்று ஊா்களின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஊர்களுக்கு எத்தனை கிலோ மீட்டர் என்று குறிப்பிடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தென்காசி, செங்கோட்டைக்கு எத்தனை கிலோ மீட்டர் உள்ளது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். வாகன ஓட்டிகளின் நலன் கருதி வழிகாட்டி பலகையில் தென்காசி, செங்கோட்டைக்கு எத்தனை கிலோ மீட்டர் என்று குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
 அம்ஜத், முதலியார்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

சிவகிரி தாலுகா தென்மலை வழியாக சுப்பிரமணியபுரம், அருகன்குளம், செந்தட்டியாபுரம், புதூர் வரை செல்லும் சாலையானது சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள். மேலும் மோசமான சாலையால் இந்த வழியாக சென்றுவந்த அரசு டவுன் பஸ்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஜெகதீசன், அருகன்குளம்.

காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டி

கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஞ்சாயத்து முப்பிடாதி அம்மன் கோவில் கீழத்தெருவில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியின் மின்ேமாட்டார் பழுதடைந்து இருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் தொட்டி காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து, தண்ணீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். 
திருக்குமரன், கடையம்.

தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைக்கப்படுமா? 

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே அங்கமங்கலத்தில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாதையானது திருச்செந்தூர்-நெல்லை முக்கிய சாலையாகும். இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. ஆனால் இந்த தரைப்பாலத்தில் தடுப்புகள் இல்லாததால் ஆபத்தான முறையில் காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே தரைப்பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
துரைமுருகன், முக்காணி.

மேலும் செய்திகள்