மூதாட்டியின் வீடு இடிப்பு
வாய்மேடு அருகே மூதாட்டியின் வீட்டை இடித்ததாக கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே மூதாட்டியின் வீட்டை இடித்ததாக கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தென்னடார் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பஞ்சகல்யாணி, 2-வது மனைவி பவானி.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலும், பஞ்ச கல்யாணியும் இறந்துவிட்டனர். தற்போது தென்னடாரில் உள்ள வீட்டில் 2-வது மனைவி பவானி தனியாக வசித்து வருகிறார்.
விஷம் குடித்தார்
முதல் மனைவியின் மகன் எழிலரசன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் தென்னடாரில் தனது சித்தி பவானி வசித்து வரும் வீட்டை இடித்து விட்டு, அங்கு புதிய வீடு கட்ட வேண்டும் என முடிவு செய்து, அதை பவானியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எனது கணவர் வீட்டில் நான் இறக்கும் வரை வசித்து வருவேன் என கூறி வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார். இதனால் எழிலரசன் பலமுறை அவரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மனவேதனை அடைந்த பவானி கடந்த சில நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை(விஷம்) குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீடு இடிப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் எழிலரசன் பொக்லின் எந்திரம் மூலம் பவானி வசித்து வந்த ஓட்டுவீட்டை இடித்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்னடார் ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இடித்த வீட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகலெட்சுமி மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததால் ஊராட்சி மன்ற தலைவர் போராட்டத்தை கைவிட்டார்.
4 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசன் மற்றும் அவருடைய மனைவி கவிதா, தென்னடார் பகுதியை சேர்ந்த கருணாநிதி, நடராஜன் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.