பூத் சிலிப்புடன் பணம் பட்டுவாடா செய்ததாக புகார்
பூத் சிலிப்புடன் பணம் பட்டுவாடா செய்ததாக புகார்
அ.தி.மு.க.வினருடன் சேர்ந்து அரசு ஊழியர்கள் பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணம் பட்டுவாடா புகார்
திருப்பூர் மாநகராட்சி 31 வது வார்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். லட்சுமி நகர் ஓம்சக்தி கோவில் அருகே ஊழியர்கள் பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அரசு ஊழியர்கள் அ.தி.மு.க.வினருடன் இணைந்து பூத் சிலிப்புடன் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கூறி அப்பகுதியில் உள்ள தே.மு.தி.க.வினர் அரசு ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணை
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஊழியர்கள் பூத் சிலிப் மட்டுமே வினியோகம் செய்து வந்ததாகவும், அ.தி.மு.க.வினர் அங்கு இருந்ததால் அவர்களிடம் முகவரிகளை கேட்டுக்கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால் தே.மு.தி.க.வினர், அரசு ஊழியர்களை பணம் பட்டுவாடா செய்வதாக குற்றம் சாட்டினார்கள். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து விசாரித்தனர். இதுகுறித்து எழுத்து மூலமாக புகார் அளிக்குமாறு கூறினார்கள். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.