வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருவதால் வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Update: 2022-02-13 14:49 GMT
வால்பாறை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருவதால் வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

வால்பாறையில் நேற்று சந்தை நாள் என்பதால் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வால்பாறைக்கு வந்திருந்திருந்தனர். அப்போது அனைத்து வார்டு பகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து கட்சியினர் வால்பாறை நகர் பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.  இதனால் கட்சியின் தொண்டர்கள் அதிகப்படியானோர் நகரில் கூடி ஊர்வலமாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் வால்பாறை நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவானது.
மேளதாளத்துடன் அண்ணாசிலை பகுதியில் குவிந்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 
சுற்றுலா பயணிகள் வாகனங்கள், அரசு பஸ்கள், உள்ளூர் வாசிகளின் வாகனங்கள் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து வாகனங்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

கூடுதல் போலீசார் வேண்டும்

வால்பாறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதை அறிந்திருந்தும் வால்பாறை போலீசார் கூடுதல் போலீசாரை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தாமல் விட்டதால்தான் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டினார்கள். 
வால்பாறை போலீஸ் நிலையத்தில் போதிய போலீசார் இல்லாத நிலையில் வருகிற நாட்களில் தேர்தல் பிரசாரம் தீவிரமடையவுள்ள நிலையில் தேர்தல் பணிக்காகவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணிக்காகவும் கூடுதல் போலீசாரை உயர் அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்று வால்பாறை பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்