ஐகோர்ட்டு உத்தரவுபடி சாமி சிலையை அகற்றி கோவிலுக்கு ‘சீல்’
பொள்ளாச்சி அருகே ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிலையை அகற்றி கோவிலுக்கு ‘சீல்’ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிலையை அகற்றி கோவிலுக்கு ‘சீல்’ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலுக்கு ‘சீல்’
பொள்ளாச்சி அருகே ஆ.சங்கம்பாளையம் பாலாஜி நகரில் உள்ள ரிசர்வ் சைட்டில் விநாயகர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. ஆச்சிப் பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பொது இடத்தில் கட்டப்பட்டு உள்ள கோவிலை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு கோவிலை அகற்றி இடத்தை மீட்க பொள்ளாச்சி தாசில்தாருக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து பொள்ளாச்சி தாசில்தார் அரசகுமார் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை அகற்றும் பணி தொடங்கியது. இதற்கு விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் சாமி சிலையை அகற்றி கோவிலுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதை தொடர்ந்து கோவில் இருக்கும் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதுகுறித்து விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் கூறுகையில், தற்போது கோவில் இருக்கும் இடத்தில் இதற்கு முன் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தன. பொதுமக்கள் விநாயகர் சிலையை வழிபாடு செய்ததால் புனிதமாக மாறியது. கோவிலில் உள்ள சிலையை அகற்ற ஆகம விதிப்படி பாலாலயம் செய்து எடுக்க வேண்டும். ஆனால் எந்த விதியையும் பின்பற்றாமல் சிலையை அகற்றி விட்டனர் என்றனர்.
இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரப்படி கோவிலில் உள்ள சிலை அகற்றப்பட்டு, சீல் வைக்கப்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவத்தை தடுக்க கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்றனர்.