திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு

திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது.

Update: 2022-02-13 14:48 GMT
முருகபவனம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய உற்சவ நிகழ்ச்சியான அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் நேற்று நடத்தப்பட்டது. 
விழாவையொட்டி பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் காலை 9 மணியளவில் நடந்தது. இதனை சபா தலைவர் ஏ.கந்தசாமி ஆச்சாரி தொடங்கிவைத்தார். இந்த ஊர்வலம் ரத வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.
மஞ்சள் நீராட்டு
அங்கு, அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்யப்பட்டது. இதையொட்டி அனைவரின் மீதும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. அதன் பிறகு அம்மன் வீதிஉலா தொடங்கியது. 
இதில் பக்தர்கள் அனைவரும் மஞ்சள் நீராடி ரதவீதிகள் வழியே அம்மனை சபா மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு, மஞ்சள் நீராடி அழைத்து வந்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு மாலை 6 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
மின்னொளி தேர்
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா தொடங்கியது. இதில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் தாரை, தப்பட்டை, கரகாட்டம் உள்பட கிராமிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் விஸ்வகர்ம இளைஞர் சபா சார்பில் அக்கசாலை விநாயகர் மின்னொளி தேர் முன்செல்ல, அடுத்ததாக விஸ்வ பிரம்ம மின்னொளி தேரும், அதற்கு அடுத்ததாக கோட்டை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மின்னொளி தேரும் ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. கோவில் கலையரங்கில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. 
விழா ஏற்பாடுகளை சபா பொதுச்செயலாளர் சந்தானம், பொருளாளர் பொன்னலங்காரம், அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், இயக்குனர்கள் சின்னு, குமரேசன், பொருளாளர் சாமிக்கண்ணு, துணைச்செயலாளர்கள் காளிராஜ், சண்முகம் உள்பட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை 5 மணியளவில் கோவிலில் கொடியிறக்கம் செய்யப்படுகிறது. 


மேலும் செய்திகள்