மாசி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
மாசி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அது மட்டுமின்றி தமிழ்மாத பிறப்பு, கிருத்திகை, வார விடுமுறை உள்ளிட்ட நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
அந்தவகையில் வார விடுமுறை மற்றும் மாசி மாதப்பிறப்பான நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகம் காணப்பட்டது. அதிகாலை முதலே மலைக்கோவில், திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் மாசி மாதப்பிறப்பை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மலைக்கோவிலில் உள்ள ஆனந்தவிநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.