விவசாய சாகுபடிக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை
விவசாய சாகுபடிக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை
மடத்துக்குளம் பகுதியில் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளதால் விவசாயிகள் ெதன்னை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.
தொழிலாளர்கள் பற்றாக்குறை
மடத்துக்குளம் பழைய ஆயக்கட்டு பகுதியில் நெல் முக்கிய பயிராகவும், பாரம்பரியமான சாகுபடியாகவும் உள்ளது. அமராவதி அணையின் நீர இருப்பை பயன்படுத்தி குறுவை, சம்பாபருவத்தில் நடவு செய்யப்படுகிறது.இந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
இதனால் நெல்சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் தயக்கம் காட்டத்தொடங்கியுள்ளனர்.நடவு தொடங்கி அறுவடை வரை முழுக்க, முழுக்க விவசாய தொழிலாளர்களை நம்பியே நெல்சாகுபடி உள்ளதால், தொழிலாளர்கள் தேவை குறைவாக உள்ள பயிருக்குக்கு மாறி வருகின்றனர்.இதனால் பல இடங்களில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாற்று சாகுபடி
அமராவதி ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு பகுதி, மடத்துக்குளம்-கணியூர் ரோட்டில் உள்ள செக்கான் ஓடை மற்றும் குமரலிங்கம், கொழுமம், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை, வாழை உள்ளிட்ட மாற்று சாகுபடிக்கு விவசாயிகள் மாறியுள்ளனர்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
நெல்நாற்றங்கால் உற்பத்தி தொடங்கி களை எடுப்பது, மருந்து தெளிப்பு, நீர்பாசனம் செய்வது, அறுவடை செய்வது அதன்பின்பு மூட்டைகளாக பிடித்து விற்பனைக்கு கொண்டு செல்வது வரை அனைத்திற்கும் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் சாகுபடி செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது விவசாய பணிக்கு வர தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்தால் போக்குவரத்து, தங்குமிடம் என இரு மடங்கு செலவாகிறது. இதனால் தென்னை உள்ளிட்ட மாற்றுசாகுபடியில் ஈடுபடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.