ஆன்லைனில் துணிக்கடை பெயரில் நூதன மோசடியில் வாலிபர் கைது
ஆன்லைனில் துணிக்கடை பெயரில் நூதன மோசடியில் போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து துணிகளையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 52) என்பவர், கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘சென்னை டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிகளை மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், அதே பெயர் மற்றும் ஜி.எஸ்.டி. எண்ணை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கணேசன் நடத்திவரும் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, சென்னை பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பவர் ஆன்லைனில் துணி வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் கார்த்திகேயன் ஆந்திரா, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து துணிகளை சென்னைக்கு வரவழைத்து, மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திகேயனை கீழ்ப்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்ததோடு, அவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள துணிகளையும் பறிமுதல் செய்தனர்.