சிவன் கோவில் பக்தர்கள் திடீர் போராட்டம்
பாளையங்கோட்டையில் சிவன் கோவில் பக்தர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
மகா சிவராத்திரி விழா வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் (சிவன்) கோவிலில் பக்தர்கள் சார்பில் பிரசாதம் வழங்குதல், பஞ்சாட்சரம் சிறப்பாக எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவில் வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜை தவிர மற்ற நிகழ்ச்சிகளை நடத்த கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சிவன் கோவில் பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த ஆண்டு சிவராத்திரி அன்று வழக்கமாக நடைபெறும் பூஜைகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினர். இதுதொடர்பாக அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு செல்லுமாறு போலீசார் கூறினர். இதையடுத்து பக்தர்கள் கோரிக்கை மனுவை அலுவலகத்தில் அளித்து விட்டு கலைந்து சென்றனர்.