சேலத்தில் எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.8 லட்சம் திருட்டு-மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
சேலத்தில் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்து எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.8 லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலத்தில் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்து எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.8 லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எலக்ட்ரிக்கல் கடை
சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பர் லால் (வயது 63). இவர் பள்ளப்பட்டி அர்த்தனாரி நகரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். கடந்த 10-ந் தேதி இரவு இவர் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி அதன் சாவியை அங்கிருந்த காவலாளியிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். முன்னதாக அவர் கடைக்குள் ரூ.8 லட்சம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கடையை திறப்பதற்காக விஸ்வாம்பர் லால் அங்கு வந்தார். பின்னர் அவர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பின்பக்கமுள்ள ஜன்னலில் 3 கம்பிகள் அறுக்கப்பட்டிருந்தன. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் இருந்த ரூ.8 லட்சமும் திருட்டு போனது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து கடையில் வேலை பார்ப்பவர்கள், காவலாளி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் மர்ம நபர் ஒருவர் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்து பணத்தை திருடியது பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் பணத்தை திருடியது தொடர்பாக அந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.