வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி
தஞ்சை மாநகராட்சி தேர்தலில் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாநகராட்சி தேர்தலில் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் 15 மையங்களில் இந்த பணி நடந்தது.
மாநகராட்சி தேர்தல்
தஞ்சை மாநகராட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இது 51 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 196 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28- தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் 282 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக தஞ்சை மாநகராட்சி 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 597 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெயர் சின்னம் பொருத்தும் பணி
இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி தரைதளத்தில் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 15 மேஜைகளில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடந்தது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இந்த சின்னம் பெயர் பொருத்தம் பணி நடைபெற்றது.
இதனை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.