‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பை வண்டி வருமா?
சேலம் அம்மாபேட்டை வித்யா நகரில் பல மாதங்களாக துப்புரவு பணியாளர்கள் வண்டியில் வந்து வீடுகளில் இருக்கும் குப்பைகளை வாங்கி செல்வதில்லை. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. சிலர் குப்பைகளை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை வண்டி வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்த், வித்யா நகர், சேலம்.
===
புதிய போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் புளியம்பட்டி பகுதியில் சாலையில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மிக அதிக அளவில் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெ.பழனிவேல், புளியம்பட்டி, ஓமலூர்.
===
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
தர்மபுரி குமாரசாமிபேட்டை ரெயில்வே மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் பிரியும் தார் சாலை ரெட்டிஅள்ளி வழியாக தர்மபுரி-கிருஷ்ணகிரி பைபாஸ் சாலை மற்றும் சவுளூர் பகுதியில் உள்ள பாலக்கோடு சாலையுடன் இணைகிறது. இந்த சாலையை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள், என பல்வேறு வகையான வாகனங்கள் இந்த வழியாக தினமும் சென்று வருகின்றன. இந்த சாலையில் பல இடங்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த தார் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
முனிராஜ், தர்மபுரி.
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து, புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக பழுதடைந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மெதுவாக செல்லும் போது 4 சக்கர வாகனங்கள் பின்னால் வேகமாக வந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. எனவே புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.
சபரீஸ்வரன், கிருஷ்ணகிரி
===
தெருநாய்கள் தொல்லை
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக பெரிய மாரியம்மன் கோவில் அருகிலும், அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் தெருநாய்கள் அதிகமாக சுற்றுகின்றன. இந்த தெருநாய்கள் சாலைகளின் குறுக்கே சென்று விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
எஸ்.கே.ரமேஷ், கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது. பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் இங்குள்ள சாலைகளில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிவதால், இந்த பகுதி மக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தெருநாய்கள் சண்டைபோட்டவாறும், குரைத்துக்கொண்டே இருப்பதாலும், மக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சேகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஓசூர்.
====
குடிநீர் தட்டுப்பாடு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது தத்தாதிரிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் பயன்படாத வகையில் பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. இந்த குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அவதியடைந்து வருகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்னேஷ் ஆறுமுகம், தத்தாதிரிபுரம், நாமக்கல்.
====
சுகாதார சீர்கேடு
கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை செல்லும் சாலையில் மேம்பாலம் அருகில் குப்பைகள் தினமும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும அபாயமும் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தினமும் அந்த பகுதியில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. எனவே அந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
கார்த்தி, கிருஷ்ணகிரி
===
சாலையின் நடுவே குழி
நாமக்கல் நகராட்சி 39-வது வார்டு கணபதி நகரில் குடிநீர் பணிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலையின் நடுவே குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்தும் இந்த குழி இன்னும் மூடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குழியை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், நாமக்கல்.
===