‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-12 21:12 GMT
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு முதலி தோட்டம் செல்லும் வழியில் பலர் குப்பைகளையும் மணல் மூட்டைகளையும் கொண்டுவந்து ரோட்டின் ஓரமாக கொட்டி சென்று விடுகிறார்கள். இதனால் அதில் இருந்து குப்பைகள் காற்றில் பறந்து அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகிறது. மேலும் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
இளங்கோ, ஈரோடு.


குழி மூடப்படுமா?
கோபி அக்ரகாரம் கிருஷ்ணன் வீதியில் இருந்து கருப்பராயன் கோவிலுக்கு இணைப்பு சாலை செல்கிறது. அந்த சாலையில் சாக்கடை கழிவு நீர் செல்வதற்கு சில வருடங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. பின்னர் அந்த குழி சரியாக மூடப்படவில்லை. மேலும் அந்த இடத்தில் மின் கம்பம் ஒன்றும் உள்ளது. குழி காரணமாக மின்கம்பம் சாய்ந்து விழும் நிலை உள்ளது. எனவே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.


குடிநீர் இணைப்பு வேண்டும்
பெருந்துறை வட்டம், துடுப்பதி ஊராட்சியில் வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில குடியிருப்புகள் தொலைவில் உள்ளதை காரணம் காட்டி குடிநீர் இணைப்பு மறுக்கப்பட்டது. இதனால் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே தெருவோர குடிநீர் குழாய்கள் அனைத்தும்  துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் குடிநீருக்காக சைக்கிளில் காலிக்குடங்களை கட்டிக்கொண்டு அடிபம்புகளையும், குடிநீர் குழாய்களையும் தேடி அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அனைத்து மக்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், துடுப்பதி.


ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
மொடக்குறிச்சி நால் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மொடக்குறிச்சி.

பழுதடைந்த குடிநீர் தொட்டி
கோபி அருகே உள்ள கலிங்கியம் ஊராட்சி பொரசமருத்தூர் பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்துவிட்டு புதியதாக குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்.
பொதுமக்கள், பொருசமருத்தூர்.
-----------

மேலும் செய்திகள்