மணமேடையில் திடீரென மயங்கி விழுந்து புதுப்பெண் மூளைச்சாவு
கோலார் அருகே மணமேடையில் திடீரென மயங்கி விழுந்து புதுப்பெண் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை அவருடைய பெற்றோர் தானம் செய்தனர்.
பெங்களூரு:
மணப்பெண்
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நிகழக்கூடிய முக்கிய திருப்புமுனை ஆகும். தனது வாழ்க்கை துணை மூலம் வாழ்நாள் முழுவதும் இவ்வுலகை ரசிக்க வேண்டும் என்று பலரும் சொல்வது உண்டு. அப்படி பல ஆயிரம் கனவுகளுடன் திருமணத்திற்கு தயாரான ஒரு இளம்பெண் மண மேடையில் மயங்கி விழுந்து இறந்த பரிதாப சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா(வயது 26). இவருக்கு இவரது பெற்றோர் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். இதையடுத்து சைத்ராவின் திருமணம் சீனிவாசப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலையில் நடைபெற இருந்தது.
மயங்கி விழுந்தார்
இதற்காக நேற்று முன்தினம் இரவே திருமண மண்டபத்தில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும், உற்றார்-உறவினர்களும் திரண்டனர். மேலும் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று காலையில் முகூர்த்தம் நடைபெற இருந்த நிலையில் அதிகாலையில் மணமகள் மற்றும் மணமகனுக்கு ஆரதக்ஷனா எனும் முகூர்த்த சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இந்த சந்தர்ப்பத்தில் மணமேடையில் நின்று கொண்டிருந்த மணமகள் சைத்ரா, திடீரென நிலைகுலைந்து மயங்கி விழுந்தார்.
மூளைச்சாவு
இதனால் சைத்ராவின் பெற்றோர், மணமகன் வீட்டார் உள்பட மண்டபத்தில் இருந்த அனைவரும் பதற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சைத்ராவுக்கு முதலுதவி செய்து பார்த்தனர். ஆனால் அவர் கண்விழிக்கவில்லை. இதையடுத்து அவரை அவரது பெற்றோரும், உறவினர்களும் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சைத்ரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த செய்தியைக் கேட்டு சைத்ராவின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
உடல் உறுப்புகள் தானம்
மணப்பெண்ணாக இருக்க வேண்டிய சைத்ராவின் நிலையைக் கண்டு மணமகன் வீட்டார் உள்பட அனைவருமே சோகத்தில் மூழ்கினர். மேலும் திருமண மண்டபத்தில் குவிந்திருந்தவர்களும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதனால் திருமண மண்டபம், மணமக்கள் வீடுகள் மூழ்கியது. இந்த துக்கத்திலும் மூளைச்சாவு அடைந்த சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இதுபற்றி அவர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
அதன்படி சைத்ராவின் உடல் உறுப்புகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து தானமாக பெற்றனர். பல ஆயிரம் கனவுகளுடன் திருமண கோலத்தில் இருந்த சைத்ராவின் திடீர் சாவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அனுதாபம்
இதற்கிடையே இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்த அவரது பெற்றோருக்கு சுகாதார துறை மந்திரி சுதாகர் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த பதிவில் சைத்ராவின் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான தகவலை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த பலரும் சைத்ராவுக்கு அனுதாபம் தெரிவித்து வருகிறார்கள்.