வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

கொல்லங்கோடு நகராட்சி மற்றும் 15 பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.

Update: 2022-02-12 20:52 GMT
நாகர்கோவில், 
கொல்லங்கோடு நகராட்சி மற்றும் 15 பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் என மொத்தம் 56 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்திலும், கொல்லங்கோடு நகராட்சிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொல்லங்கோடு நகராட்சி அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மற்ற 3 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 7 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சின்னங்கள் பொருத்தும் பணி
இந்தநிலையில் நேற்று கொல்லங்கோடு நகராட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய தாள்களை பொருத்தும் பணி நேற்று அந்தந்த வார்டு வேட்பாளர்கள் முன்னிலையில் நடந்தது. 
இந்த பணியை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் வெங்கடேஷ், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் சந்திரசேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சின்னங்கள் மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய தாள் பொருத்தப்பட்ட பிறகு அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இயக்கி பரிசோதிக்கப்பட்டன. அப்போது பழுது ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல் ஆரல்வாய்மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் 4 பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் அடங்கிய தாள் பொருத்தும் பணியும், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் 11 பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் அடங்கிய தாள் பொருத்தும் பணியும் நடந்தது.
இன்றும், நாளையும்...
இன்று (ஞாயிற்றுக்கிழமை) குளச்சல் நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் அடங்கிய தாள் பொருத்தும் பணி லெட்சுமிபுரம் கல்லூரியிலும், 7 பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் அடங்கிய தாள் பொருத்தும் பணி ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. கல்லூரியிலும் நடைபெறுகிறது.
நாளை (திங்கட்கிழமை) மார்த்தாண்டம் நேசமணி நினைவு கல்லூரியில் குழித்துறை நகராட்சிக்கும், 11 பேரூராட்சிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய தாள் பொருத்தும் பணி நடக்கிறது. தக்கலையில் உள்ள அரசு பள்ளியில் பத்மநாபபுரம் நகராட்சிக்கும், 9 பேரூராட்சிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் அடங்கிய தாள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்