ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் டி.ஐ.ஜி.- போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேர்தல் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பவானி நகராட்சி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று பவானிக்கு வந்தார். இதைத்ெதாடர்ந்து பவானியில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்பட பதற்றமான 12 வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கேட்டு அறிந்ததுடன், தேவைப்பட்டால் கூடுதலாக போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் அங்கிருந்த போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் பேரூராட்சியில் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள 5 வாக்குச்சாவடிகள், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடி, தவுட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடி உள்பட 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டன.
இதைத்ெதாடர்ந்து அந்தியூருக்கு வந்த கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி அங்குள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அங்கிருந்த போலீசாரிடம், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், ஆயுதம் தாங்கிய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் ஆங்காங்கே போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் உடனிருந்தனர். இதைத்ெ்தாடர்ந்து அவர் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புஞ்சைபுளியம்பட்டி- சத்தியமங்கலம்
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கெ.ஓ.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வரிசையாக நிற்பதற்கு வசதி உள்ளதா? சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளதா? மற்றும் பாதுகாப்பு குறித்து அங்கிருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் வேலுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல் சத்தியமங்கலம் நகராட்சியில் தொடக்கப்பள்ளி, ஆண்கள் உயர்நிலை பள்ளி, பெண்கள் உயர்நிலை பள்ளி, மற்றும் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.