2 குழந்தைகளை கொன்று, ஏரியில் குதித்து பெண் தற்கொலை
பெலகாவி அருகே 2 குழந்தைகளை கொன்று ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
பெலகாவி மாவட்டம் சாகாத்திரி நகரை சேர்ந்தவர் மனீஷ். இவரது மனைவி திரிஷா கேசவாணி(வயது 36). இந்த தம்பதிக்கு வீரேஷ்(7), பாவீர்(4) என்ற மகன்கள் இருந்தார்கள். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது குழந்தைகள் 2 பேரையும் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் பின்புறம் இருக்கும் ஏரியில் தள்ளி திரிஷா கொலை செய்தார். பின்னர் அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்தார். இதுபற்றி கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெலகாவி புறநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் ஏரியில் இருந்து 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இதற்கிடையில், குடும்ப பிரச்சினையில் தனது மனைவி, குழந்தைகளை கொன்று மனீஷ் தான் உடல்களை ஏரியில் வீசி இருப்பதாக திரிஷாவின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதுகுறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனீசை பிடித்து விசாரித்து வருகின்றனர்.